பொட்டல்காடு

இங்கே எல்லாமும் விளையும்

தொத்தனுக்கு நேர்ந்த கதி!


‘தொத்தன்’இப்படி ஒரு பேரைக் கேட்டாலே பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.பேருதான் அப்படியே தவிர...ஆள் பலசாலி.அவனுக்கு ஏன் அப்படி ஒரு பேர் வந்தது என்று யாருக்குமே தெரியாது.யாரோ எப்போதோ பரிதாபப்பட்டு கொடுத்த சட்டையும்,வேஷ்டியும்தான் அவனது உடை.அது கூட கிழிந்து நார்நாராக தொங்கி கொண்டிருக்கும்.அதுக்கு மாற்று உடை யாராவது ஒரு புன்னியவான் கொண்டு வந்து கொடுத்தால்தான் உண்டு.புது துணி கிடைக்கும்போது சந்தோஷபட்டதாகவோ ....கிடைக்காததற்காக வருத்தப்பட்டதாகவோ தொத்தன் ஒருபோதும் காட்டிகொண்டதில்லை!

எங்கள் ஊரிலுள்ள பெருசுகள் தொடங்கி வாண்டுகள்வரை “டே...தோத்தா” என்றுதான் கூப்பிடுவார்கள்.”வந்தேன்”ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு வந்து நிப்பான்.”சாப்பிட்டா?”என்று கேட்டால் “ம்....சாப்பிடலாம்!”என்று சொல்லிவிட்டு என்ன வேலை இருக்கு என்பதைப்போல பார்ப்பான்.விறகு வெட்டுவது தொடங்கி..மாடு குளிப்பாட்டுவது என்று ஏதாவது ஒரு வேலை செய்தால்தான் அவனுக்கு சாப்பாடு உள்ளே இறங்கும்.

கிராமத்து வாழ்கையின் அன்றாட தேவைகளில் ஏதாவது ஒரு வேலை செய்யாமல் எந்த வீட்டு வாசலிலும் சாப்பாட்டுக்காக ஒரு போதும் நின்றதில்லை தொத்தன்....எனக்கு நினைவு தெரிந்தவரை! டீ சாப்பிடுவதாக இருந்தாலும் இந்த கொள்கையில் மாற்றம் இல்லை.சாப்பாடோ ,டீயோ ...முடிந்ததும் அவனுக்கு சிகரேட்டோ,பீடியோ கட்டாயம் இருக்க வேண்டும்.கொடுத்தால் வாங்கிகொள்வான்.இல்லையென்றால் யாராவது பெருந்தன்மையாக அல்லது ஸ்ட்டைளுக்காக பாதியில் அணைத்து போட்ட சிகரெட்டு துண்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டு ஆனந்தமாக இழுப்பான்.அப்புறம் ராத்திரியானால்..கோயில் திண்ணை அல்லது அடைத்து கிடக்கும் எதோ ஒரு பொட்டிக்கடை பலகையில் படுத்து தூங்கிவிடுவான்.இவ்வளவுதான் தொத்தனின் உலகம்! இந்த வாழ்க்கைக்கு தொத்தன் எப்போது தயாரானான் என்பது குறித்து எவருக்குமே இதுவரை தெரியாது.
‘அவன் பொண்டாட்டி அவனை விட்டுட்டு ஓடிப்போயிட்டாலாம்...அதுலருந்தே இப்பிடியாகிட்டான்’என்ற ஒற்றை வரிக்குமேல் அவனுடைய வாழ்க்கை வரலாறு எவருக்குமே தெரியவில்லை!தெரிஞ்சு என்ன பண்ணப்போறோம் என்கிற அலட்சியமாகக்கூட இருக்கலாம்.

எப்போது ஊருக்கு போனாலும் தொத்தன் எங்காவது தட்டுப்படுகிறானா என்று பார்ப்பேன்.ஊரிலிருக்கும் ஒன்றிரண்டு நாட்களில் அது வாய்க்காமலே போய்விட்டது.இந்த முறை தற்செயலாக எதிர்பட்டான்.அவனை முதன்முதலாக எப்படி பார்த்தேனோ...அப்படியேதான் இப்போதும் இருந்தான்.தோற்றத்தில் மட்டும் முதிர்ச்சி தெரிந்தது.கிட்டத்தட்ட எழுபது வயது இருக்கும்.இப்போதும் வேலை செய்தபிறகுதான் சாப்பாட்டுக்கு உட்காருவது என்ற கொள்கையை மாத்தாமல்தான் இருக்கிறான்.அவனது பிடிவாதம் மாறாமல் இருப்பது ஆச்சரியமாக இருந்தது.

என்ன வேலை செய்வது என்பதுதான் அவனோட பிரச்சினையே!நான் ஊரை விட்டு வரும்போது சின்ன கிராமமாக இருந்த ஊர் இப்போது நகராட்சி அந்தஸ்து பெற்று புதுப்பொலிவோடு இருக்கிறது.கூரை வீடெல்லாம் கார வீடாகிவிட்டது.வீட்டுக்கு வீடு காஸ் அடுப்பு,குக்கர்,மிக்ஸி என்றான பிறகு விறகுக்கு எங்கே வேலை இருக்கிறது!?விவசாய வேலைகளும் யந்திர கதியாகிவிட்டது!மண் வேட்டுவதற்கே பொக்லைன் கொண்டு போகிற அளவுக்கு வாழ்க்கை வசதியாக மாறிவிட்டது.அறிவியல் கிராமம்வரை வந்ததுக்காக நான் சந்தோஷப்படுவதா....அல்லது தொத்தன் என்ன வேலை செய்துவிட்டு, யார் வீட்டு வாசலில் அடுத்த வேலை சாப்பாட்டுக்காக உட்காருவான் என்று கவலைப்படுவதா!?
“டே...தொத்தா...”
”வந்தேன்”.
”சாப்பிட்டியா”
“ம்...சாப்பிடணும்”