பொட்டல்காடு

இங்கே எல்லாமும் விளையும்

கொம்பு ரெக்கார்டு – 1


ப்போது ஊருக்கு போனாலும் சில சந்தோஷங்களும் சில சோகங்களும் ஞாபகக்கிடங்கில் படிமங்களாக உறைந்து போவதை ஒருபோதும் என்னால் தடுக்க முடிந்ததில்லை இப்போதும்!கில்லிதாண்டு,காக்கா குஞ்சு,கபடி,கிட்டிப்புள்ள,பம்பரம் சுத்துறது,தில்லித்தில்லி பொம்மக்கா என்று ஆண் குழந்தைகளுக்கும் பெண்குழந்தைகளுக்கும் கொண்டாட்டமாக இருந்த விளையாட்டுகள் எதுவும் இப்போதிருக்கிற குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

நான் ஊரிலிருந்த போது பார்த்த மந்தை அம்மன் கோயில்,வட்டக்கிணறு,பெரியாத்து வாய்க்கால் என அத்தனையும் அப்படியே இருக்கிறது.அதில் விளையாடிய சிறுவர்கள் யாரும் இப்போது ஊரில் இல்லை.

என்னைப்போல் பொழப்பு தேடி புலம் பெயர்ந்துவிட்டார்கள்.திருவிழாக்களின் போது மட்டும் புதுப்பொழிவு பெரும் சுண்ணாம்பு சுவர்களும் .....வாசனையும் காணோம்.முதல் மழை பெய்யும் போது மூக்கு நாசியில் வந்து ஒட்டிக்கொள்ளும் மண்வாசனை இல்லை.வீதியின் நீள அகலம் மாறாமல் அப்படியே இருக்கிறது.ஆட்கள் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறார்கள்.ஒன்றிரண்டு பெருசுகள் மட்டும் “என்னப்பா வீரமணி மகனா நல்லாருக்கியா?” என்று விசாரித்துக்கொண்டு கிராமத்தின் சுவடுகளை சுமந்தபடி  தள்ளாடி தள்ளாடி நடந்து கொண்டிருக்கிறார்கள்.
நாகரீகங்கள் தேங்கிக்கிடக்கிற தெருக்களில் நடந்துபோகும்போது அசலூருக்குள் நடந்து போகிறமாதிரி அந்நியமாக இருக்கிறது எல்லாமே!

எனது குழந்தைபருவமும் பால்யமும் இப்படி இல்லை.என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் வட்டம் அதிகமாக இருக்கும்.குண்டன் சேகர்,
ஓவாரு ரவி,சுரேஷ்,மணிகண்டன் (இப்போது இவன் டாக்டர்)இன்னொரு மணிகண்டன்,பிரபாகரன்,மகேந்திரன்(சிவில் என்ஜினியர்)ஆண்டி மகன் கண்ணன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.எல்லோருக்கும்  ஏகப்பட்ட கனவுகள்.அதிகாலை என்.எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி கிரவுண்டில் ஒன்று சேருவோம்.சின்னச்சின்ன இடைவெளிகளில் மீண்டும் சேர்ந்தால் ராத்திரி தூங்கப்போகும்போது ராத்திரி பதினோரு மணியாகிவிடும் எல்லா நாட்களிலும்.

எங்களுடைய பேச்சில் அதிகம் சினிமாதான் இடம்பெற்றிருக்கும்.அண்ணன் எம்.ஆர்.பாரதி அப்போது உதவி இயக்குனராக இருந்தார்.அவர் எழுதுகிற கடிதங்களில் சினிமா பகிர்வு அதிகமாக இருக்கும்.அதுவே எனக்குள் சினிமா ஆசை வளர காரணமாக இருந்தது என்றுகூட சொல்லலாம்.நாளடைவில் அதுவே என் நண்பர்கள் வட்டத்தில் எனக்கு சினிமாக்காரன் என்று பேர் வர  காரணமாக இருந்தது.அதன் தொடர்ச்சியாக அதிகம் படம் பார்க்கத்தொடங்கினேன்.

கூடலூரில் அப்போது இரண்டு தியேட்டர்கள் மட்டும்தான்.எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் பி.எஸ்.சி தியேட்டர் இருந்தது.நினைத்த நேரத்தில் படம் பார்க்கிற உரிமை எங்கள் வீட்டில் மறுக்கப்பட்டிருந்தது.எங்கப்பா வீரமணி கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.மரணத்தின் கடைசி தருணத்திலும் கடவுள் மறுப்பில் உறுதியாக இருந்ததை என்னால் மறக்கவே முடியாது.வாரத்திற்கு ஒருமுறை சனிக்கிழமை மட்டும் மாட்னி ஷோ பார்த்துக்கலாம்.அது எப்படி நம்மோட சினிமா அறிவை வளர்த்துக்கொள்ள போதுமானதாக இருக்கும்!?அதற்காக அப்பவே ரூம் போடாமல் யோசித்து ஒரு காரியம் செய்தேன்.

மணி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் ரொம்பவே சிரமப்பட வேண்டியதிருக்கும்.எங்க ஊரில் ஒரு வழக்கம்..படம் போடுகிற நேரம்வரை ஏகப்பட்ட சினிமா பாடல்கள் ஒலிக்கும்.கடைசியாக கொம்பு ரெக்கார்டு
போட்டால் படம் போடுகிற நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.காடு கரைகளுக்கு வேலைக்கு போகிற ஆட்களுக்குகூட அந்த பாட்டுதான் சாப்பாட்டுக்கான நேரம் என்று முடிவுபண்ணி வைத்திருப்பார்கள்.

அந்த பாட்டு ஒலிக்கும்போது தியேட்டருக்குள் போய் இடைவேளைவரை படம் பார்ப்பேன்.அதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்துவிடுவேன்.அடுத்த நாள் இடைவேளை நேரத்துக்கு போய் மீதிப்படம்..இப்படிதான் இருந்தது எனக்கான சினிமா தாக்கம்.மணலைக்குவித்து அதன் மீது உட்கார்ந்து பார்த்த அனுபவம் இப்போது ஐநாக்ஸ் தியேட்டரில் பார்க்கும்போதுகூட இல்லை.                     - (இன்னும் தூசி தட்டுவோம்... )

சும்மா..ஒரு விளம்பரம்....


த்திரிகையில் இருந்து சினிமா பி.ஆர்.ஒ வாக நான் புலம் பெயர்ந்தது அப்படியொன்றும் திட்டமிட்டு நடந்ததில்லை.பத்திரிகையில் சேர்வதுக்கு முன்பு வேறொரு அடையாளம் தேடி சென்னைக்கு வந்தவன்.அதனாலேயே எப்போதும் என்னை, நான் சார்ந்த தொழிலில் முன்னிலைப்படுத்திகொள்ள விரும்பியதில்லை!

இயக்குனர் ஷங்கர் சார் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ரெட்டைச்சுழி' படத்துக்கு நான்தான் பி.ஆர்.ஒ.அதுகூட அந்தப்படத்தின் இயக்குனர் தாமிரா வாங்கிகொடுத்த வாய்ப்பு.பாலசந்தர்,பாரதிராஜா,ஷங்கர் என திரையுலகின் மூன்று ஜாம்பவான்கள் சங்கமிக்கிற இடத்தில் நானும் இருக்கிறேன் என்பது தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத பதிவு.அதற்கு காரணமாக இருந்த தாமிராவுக்கு நன்றி.

அந்தப்படத்தில் என் துணைவி சந்திரா கோ டைரக்டராக வேலை பார்த்திருக்கிறாள்.கூடவே கார்த்திக்ராஜா இசையில் ஒரு பாட்டு எழுதுகிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.'நானென்று சொல்...இல்லை நாமென்று சொல்...இந்த நாடகம் இன்றே முடித்துவிடு...'என்று போகும் அந்த பாட்டு.அதுபோக படத்தில் வரும் 'பட்டாளம் பாருடா 'என்று தொடங்கும் பாடலில் என் செல்ல மகள் பௌஷ்யாவும் சில குழந்தைகளோடு சேர்ந்து பாடியிருக்கிறாள்.அதற்காக அவள் வாங்கிய முதல் சம்பளமான ஆயிரம் ருபாயை என்னிடம் கொண்டுவந்து கொடுத்து சந்தோஷத்தில்...அவள் ராத்திரி எல்லாம் தூங்காமல் இருந்தது தனிக்கதை.

கடந்த பதினைந்தாம் தேதி ரெட்டைச்சுழி  படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா ஐஸ்வர்யாராய்பச்சன் தலைமையில் சீறும் சிறப்புமாக நடந்து முடிந்தது.ஊருக்கே தெரியும்.நிகழ்ச்சி முடிந்த அடுத்தநாள் ஒரு ஆடியோ சி.டியை என் மகளிடம் நேரடியாக கொண்டு வந்து கொடுக்க ஆசைப்பட்டான் தாமிரா.காரணம் என் மகள் முகத்தில் பூக்கும் புன்னகையை அவன் நேராக பார்க்க வேண்டும் என்பதுதான்.என் மகளை அவனுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை பீத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவனோட மகளுக்கும் பௌஷ்யா என்று பேர் வைத்திருக்கிறான் என்பதைவிட வேறொன்றும் சொல்வதற்கில்லை.


வீட்டுக்கு வந்தான் அம்மா ஒரு டீ கொடுங்க என்று என் மாமியாரிடம் கேட்டு வாங்கி குடித்தான்.பௌஷ்யாவை அருகில் அழைத்து சி.டியைக்கொடுத்தான்.நன்றி சொல்லி கண்கலங்கிப்போனாள் என் செல்லக்குட்டி.நன்றிடா தம்பி என்று நானும் நெகிழ்ந்து நெக்குருகிப்போனேன்."அக்கா பேரு வந்திருக்கு பாரு" என்று என் மகன் அபினவிடமும் அதைக் காட்டினான்.அபினவ் இரண்டாவதுதான் படிக்கிறான்.

அவன் என்னை மாதிரி ஊர்வன,பறப்பன என்று எல்லாத்தையும் வெளுத்துகட்டுவான்.குட்டிப்பையன் என்பதால் எங்கள் வீட்டில் எல்லாருமே அவனுக்கு அந்த சலுகையை கொடுத்திருக்கிறார்கள்.அவனும் கவலையே படாமல் சாப்பிட்டு கொஞ்சம் குண்டூஸ் ஆகிட்டான்.இந்த வயதில் குழந்தைகள் அப்படித்தான் இருப்பார்கள் எங்கள் வீட்டில் சொல்லி வைத்திருக்கிறேன்.

தாமிரா அவனிடம் அப்படி சொன்னதும் அவன் முகம் மட்டும் வாடிவிட்டது.என் துணைவி சந்திராவின் தோளில் சாய்ந்து முகம் புதைத்துகொண்டான்.அமைதியாக கடந்தது சில நிமிடங்கள்.தாமிரா விடை பெற்றுக்கொண்டு  போயிருந்தான்.என் மகன் அபினவ் சந்திராவின் தொழில் சாய்ந்திருந்த தருணத்தில் அவளிடம் ஒரு தகவலை ரகசியமாக பதிவு செய்திருக்கிறான்.
என்ன?"

'அம்மா...இனி நான் கொஞ்சமா சாப்பிடறேன்...கிரவுண்டுல பிராக்டிஸ் பண்ணி...உடம்பை குறைச்சிடறேன்...உன் படத்தில் என்னையும் நடிக்க வை..அப்போதான் என் பேரும் இதுமாதிரி வரும்'என்பதுதான்.

அவனுக்கு நடிப்பு ஆசை வந்ததுக்கு இரண்டு காரணம்...நானும் என் துணைவியும் சார்ந்திருக்கிற துறை. அப்புறம் சந்திரா இயக்கவிருக்கிற படத்துக்கான ட்ரைலரில் ஹீரோ குழந்தையாக இருக்கிற காட்சிகளில் அவனைத்தான் நடிக்க வைத்திருக்கிறாள்.

 
ட்ரைலரை பார்த்த அத்தனைபேரும் சந்திராவின் படைப்பை பாராட்டிவிட்டு...உங்க பையன் பிரமாதமாக நடிச்சிருக்கான் என்பார்கள்.அது அவனுக்குள் ஆழமாக பதிந்து விட்டதென்று நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக...பத்திரிகை,சினிமா என்று கடந்து
வந்திருக்கிறேன்....ஆறுவயது குழந்தைக்குள் இருக்கும் ஆசைகளும்,கனவுகளும் தெரியாமலே!?

தலைப்பு செய்தியான வள்ளி !? மறுபக்கம் ....

ள்ளி! இப்படிச்சொல்லித்தான் அந்தபொண்ணை அறிமுகம் செய்து வைத்தார் அவரது அம்மா.பத்திகைகளில் அப்போது பகுதிநேர நிருபராக இருந்தேன்.பேட்டியின்போது ஆங்கிலம்...தெலுங்கு என்று கலந்துகட்டிப்பேசினார்.அப்போது அவரது பேச்சில் தமிழ் தடுமாறியது.நாலு பக்கத்துக்கு எழுதிக்கொடுத்த பேட்டி..பிரசுரமாகி வந்தபோது பார்த்தா ல் பத்து வரியில் சின்ன பிட்டாக வந்திருந்தது.அப்போதெல்லாம் டி.வி.இன்டர்நெட்,செல்போன் எதுவுமே கிடையாது.நானும் பத்திரிகைக்கு வந்த புதுசு.பிட்டுக்கு அடியில் வி.கே.எஸ் என்று என் பெயர் வந்ததுக்கே ஊரிலிருந்து ஏகப்பட்ட லெட்டர்ஸ்.பத்திரிகையாளர்களுக்கு சினிமாவில் ஏகப்பட்ட செல்வாக்கு இருந்தது.வள்ளியும் அப்போதுதான் நடிக்க வந்த நடிகை என்பதால் அவர் பற்றிய செய்திக்கு அவ்வளவுதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் தெரியவந்தது.

தினமும் ஒரு ஷூட்டிங் பேட்டி..ச்சி...பிட்டு என்று பரபரப்பாகிவிட்டது வாழ்க்கை.வேலை பார்க்கிற வேலையோடு...சென்னையை சுத்திப்பார்க்கிற வேலையும் இருந்தது.நண்பர்களோடு அடிக்கடி லேண்ட்மார்க் போவேன்.புத்தகம் வாங்கிறதுக்கு இல்ல..போக்குக்கு அப்போது சென்னையில் வேறு இடம் கிடையாது.பீச்...அதை தாண்டினால் சினிமாதான்.வள்ளியை சந்தித்த இரண்டு வாரத்துக்கு பிறகு தற்செயலாக வள்ளியை லேண்ட்மார்க்கில் சந்திக்க நேர்ந்தது!அவரைப்பற்றி நான் எழுதிய பிட்டுக்கு அருகில் வந்து நன்றி சொன்னார்.நிறைய ஆங்கில இலக்கியங்களை அள்ளிக்கொண்டு போனார்.இலக்கியத்தில்..அதிக ஆர்வம் உள்ளவர் என்பது எனக்கு அப்போதுதான் தெரியும்.
அதன்பிறகு நடிகைகளில் இலக்கிய ஆர்வம் உள்ள நடிகைகள் என்று வள்ளி படு பிஸியாக இருந்தபோது பேட்டி எழுதியது தனி.

அப்போது சாலிக்கிராமத்தில் தனி பங்களா கட்டி குடி வந்திருந்தார் வள்ளி.கிராமங்களில் இருக்கிற லைப்ரேரியைவிட பெரிய சைசில் அவர் வீட்டில் ஒரு லைப்ரேரி வைத்திருந்தார்.அதில் தமிழ் புத்தகங்களும் அடக்கம்!

அண்ணன் சுரா அவர்களை எனக்கு பி.ஆர்.ஒ வாகத்தான் அறிமுகம்.அவரோடு பழகியபிறகு அவரது பேச்சைக் கேட்பதர்காகவே அவரை அதிகம் சந்தித்திருக்கிறேன்.இலக்கியம்...சினிமா என்று நிறைய பகிந்துகொள்வார்.வள்ளி நடித்த பல படங்களில் அவர் ஒர்க் பண்ணியிருந்ததால்..வள்ளியோடு அதிகம் பேசுகிற வாய்ப்பு இருந்தது. நடிகைகளில் மிக முக்கியமானவர்....அவர் தேர்ந்தெடுத்து படிக்கிற புத்தகங்கள் ஆச்சர்யமா இருக்கு என்று குறிப்பிடுவார்.அண்ணன் சுரா அவர்கள் சிறந்த மலையாள நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருகிறார்.இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்.

வள்ளி தனக்கு இலக்கிய ஆர்வம் இருப்பதாக எப்போதும் காட்டிக்கொண்டது கிடையாதது.புத்தம் வாசிப்பது எனக்கு மனநிறைவைக்கொடுக்கிறது.தொடர்ந்து படிக்கும்போது வாழ்கை அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் மாறிப்போகிற அற்புதம் நிகழும் அதுபோதும் என்பது வள்ளியின் ஸ்டேட்மென்ட்.

அதுசரி ...நடிகை வள்ளி யாரென்று சொல்லவில்லையே....சாமியார்(!)நித்யானந்தாவோடு தலைப்பு செய்தியாகிவிட்ட ரஞ்சிதா! காலம் அவரை இப்படி புரட் டிப்போட்டிருக்க வேண்டாம்!?

மார்ச் 8 அம்மாத்தாயிகள் தினம் ....

ரப்போகும் மார்ச் 8! பெண்கள் தினத்தைக் கொண்டாட ஊரே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.தனியாக இப்படி கொண்டாட்டங்கள் தேவையா... என்னுள் பலமுறை கேள்விகள் எழுந்ததுண்டு.

எல்லாமே மார்ச் முதல் தேதியில் என் நண்பனை சந்திக்கிறவரைதான்.சோழன்..கல்லூரி படிப்பை முடித்து லாரி ஓனராக மதுரை மாவட்டம் மேலூரில் இருந்தவன்.கால சூழ்நிலை எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் நண்பனிடம் சென்னையில் டிரைவராக வந்து சேர்ந்திருக்கிறான். என்னைவிட...எங்கள் பாஸ் அஜீத்தைவிட அற்புதமாக கார் ஓட்டக்கூடியவன்.சென்னையின் லாவகமும்....சந்து பொந்துகளும் அவனுக்கு கைகூடவில்லை! 89-ன் தொடக்கத்தில் என் சென்னை வாழ்க்கை எனக்குள் ஆக்கிரமித்துக்கொண்டது.

அப்போதெல்லாம் சென்னை இவ்வளவு பரபரப்பாக இல்லை.விஸ்தாரமான கிராமத்து வீதியில் வாழப்பழகிய எனக்கு பட்டணத்தின் வாழ்க்கை மூச்சு முட்ட வைத்து கூடலுருக்கே திரும்பி போகச்சொல்லிய தருணங்கள் அநேகம்.சில காதலும் ...அண்ணன் ஜீவாவின் அன்பும் ..அண்ணன் எம்.ஆர்.பாரதி...அண்ணன் விஜி...அண்ணன் சுந்தரராஜன் என்று என்னைச்சுற்றி...வாழ்வாதாரங்கள் சொன்னவர்கள் அதிகம்.

சென்னை வாழ்க்கையில் எனது இருப்பை முதலில் பதிவு செய்தவர்கள் இவர்கள்.அதன் தொடர்ச்சியாக...என் தோழன் கவிதாபாரதி..நண்பன் அ.பெ.ரவிராதா...அண்ணன் டி.ராஜேந்தர் என்று எனக்கு எல்லாமுமாக இருந்தவர்கள் அநேகம்.எல்லோருக்கும் நன்றி!

இன்று இரண்டு கார்..எல்லோரையும் ஒரு போனில் தொடர்பு கொள்ளும் சாத்தியம் எல்லாத்துக்கும் காராணம்..விஜி அண்ணன், மாமனார் கொடுத்த ராலே சைக்கிள்.வீட்டு வாடைகை கொடுக்க முடியாமல் அதை அடமானமாக விட்டுவிட்டு...அர்த்தராத்திரியில்...ஜாபர்கான்பேட்டையை விட்டு வந்தது தனிக்கதை!

எப்போதாவது திருவிழா வந்தால் மட்டுமே எங்களுக்கு இட்லி சாப்பிட வாய்ப்பு கிடைக்கும்.எல்லா நாளுமே எங்கள் வீட்டில் அரிசி சாப்பாடுதான்.எங்க அம்மா அம்மாத்தாயிக்கு அதைத் தவிர வேறெதுவும் தெரியாது.பாடி பில்டராக ஆசைப்பட்டு...அந்த சாப்பாட்டை தூக்கி எறிந்ததுக்காக சென்னை வாழ்க்கை எனக்கு நிறையவே தண்டனை கொடுத்திருக்கிறது.ஒருவேளை சாப்பாடுகூட இல்லாமல் பட்டினி கிடந்த நாட்களில் அம்மாவாய் இருந்தவன் என் நண்பன் சுரேஷ்சந்திரா.
"ஏன் மகனே..சாப்பிடாமல் இருக்கே..?" என்று எப்போது போனாலும் சாப்பிட வைத்த ரவிராதா அம்மாவுக்கும் என் வணக்கம்.

இப்போது துணைவி சந்திரா..என் செல்ல மகள் பௌஷ்யா ...செல்லக்குட்டி அபி....நண்பர்கள் என்று சென்னை வாழ்க்கையில் எல்லாம் சாத்தியப்பட்டுவிட்டது .என் அம்மா மட்டும் இன்னும் எங்கள் சொந்த ஊரில் எங்கள் வீட்டில் தனியாக இருக்கிறாள்.கடந்தவாரம் நண்பர்களோடு ஊருக்கு போயிருந்தேன்...மகனே,ஹோட்டல் சாப்பாடு உனக்கு ஒத்துக்கிறாது...நான் சமைச்சு வைக்கிறேன்..கூடலூர்ல இருக்கிற எல்லா நாளும் நம்ம வீட்டுல சாப்பிடுங்கப்பானு ஒரு வாரம் முழுக்க அதிகாலை ஐந்து மணிக்கு காலை சாப்பாடும்...அதன் தொடர்ச்சியாக எல்லா நேரமும் ...எல்லாம் பண்ணிக்கொடுத்தாள் எங்க அம்மா அம்மாத்தாயி.70வயது தாண்டிவிட்ட அந்த வயசிலயும் என் அம்மாவின் அந்த சுறுசுறுப்பான பாசத்தைப் பார்த்து "எப்படிங்க..?"என்று கூட வந்திருந்த நண்பர்கள் அத்தனைபேரும் வியந்து தான் போனார்கள்!

அன்பு செலுத்த வயசு எதுக்கு ... கடந்த 28 ஆண்டுகளாக எனக்கும் என் அண்ணன்களுக்கும்...வழிகாட்டிக் கொண்டிருக்கும் கைகாட்டி மரம்..என் செல்ல அம்மா அம்மாத்தாயி.எங்க அப்பா வீரமணி எங்கள் எல்லோரையும் விட்டுப்போன நாள் மார்ச் 18,1982.அம்மாத்தாயி மாதிரி என் வாழ்க்கையில் கடந்துபோன எல்லா அம்மாக்களுக்கும் இந்த மார்ச் 8 என்ற நல்ல நாளை நன்றி நாளாக நினைவு கூர்கிறேன்...வாழ்க மகளிர்தினம் ....வாழ்த்துகள்.