பொட்டல்காடு

இங்கே எல்லாமும் விளையும்

கிழிந்த சட்டை!
'விசித்திர பிறவிகள்' இப்படி சிலர் உண்டு!  நானும் அந்த வகைதான் என்று சொல்லிக்கொள்வதில் எந்த கூச்ச நாச்சமும் எனக்கு கிடையாது!!பொதுவாக திருவிழா ,பிறந்தநாள் எல்லாமே ‘நாளை மற்றொரு நாளே’ என்று எனக்கு அறிமுகப்படுத்தியவர் எங்க அப்பா வீரமணி!
கம்யுனிஸ்டுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தனது மரணத்தின் இறுதி நாட்களிலும்  மறக்காமல் கடைப்பிடித்த காம்ரேட் அவர்.அதனாலேயே எங்கள் குடும்பத்தில் காது குத்து ,குலசாமிக்கு மொட்டை போன்ற சமாசாரங்கள் எதுவும் நடக்கவில்லை.இப்போது பலபேரிடம் காது குத்து வாங்குவது தனிக்கதை!கிராமத்தில் அப்போது புத்தாண்டு ,தீபாவளியெல்லாம் கிடையாது;பொங்கல் திருநாள்,எங்க வீட்டுக்கு எதிரே உள்ள மந்தையம்மன் கோயில் திருவிழா இரண்டும் மட்டும்தான்!ஜனவரியில் பொங்கல்...அக்டோபர் இறுதியில் கோயில் திருவிழா .....எப்படா வரும் என்று மனசு ஏங்கித்தவிக்கும்.அப்ப மட்டும்தான் புது துணி வாங்கிக்கொடுப்பார்கள்.எங்கள் வீட்டில் அதும் கிடையாது பொங்கல் மட்டும்தான் கொண்டாடணும் என்று உறுதியாக இருப்பார் அப்பா.
இங்கேதான் நான் விசித்திர பிறவியாக உரு மாற்றப்படுகிறேன்!எங்கள் வீட்டில் அண்ணன் ஜீவானந்தம்,ரெண்டாவது அண்ணன் அஜய் கோஷ் அப்பறம் மூனாவதாக நான்.விவசாய குடும்பத்துக்கே உரிய சட்ட திட்டங்கள் என் வாழ்க்கையிலும் அரங்கேறியது!பெரிய அண்ணன் போட்ட சட்டை ,டவுசர் சின்ன அண்ணனுக்கு...சின்ன அண்ணன் போட்டு முடித்த பிறகு எனக்கு!புது துணி எடுக்கிறதிலும் இந்த நடைமுறைதான் நீண்ட நாட்களாக கடைபிடிக்கபட்டு வந்தது.கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்ச பிறகு கேள்வி கேட்க முடியாமல் போனாலும் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு முறைப்புக் காட்டியதுக்கு பலன் கிடைத்தது;மூன்று பேருக்குமே புது துணி!
“பால்ராஜ் டைலர் கடையில குடுத்திருக்கேன் மூணு பேத்தையும் போயி அளவு குடுத்திட்டு வரச்சொல்லு”என்று அப்பா,அம்மாவிடம் சொன்னார்.”நல்லா ஏறக்கமா வச்சு தைக்கணும் அப்பத்தான் ரொம்ப நாளைக்கு ஒழைக்கும்”என அம்மா அவள் கவலையையும் சொல்லி அனுப்பி வச்சார்.எதுவும் மண்டையில் ஏறவில்லை!பால்ராஜ் அண்ணன் கடையில் போய் நின்றபோது மூச்சு வாங்கியது......! ”சுந்தரம்...இதான் உங்களோடது ....நல்லா இருக்கா!?” என்று பால்ராஜ் அண்ணன் கேட்டபோது,உலகமே உள்ளங்கைக்குள் வந்ததுபோல் அப்படி ஒரு ஆனத்தம்....அதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை!”இது அண்ணன்களுக்கு என்று அடுத்து அவர் எடுத்துக்காட்டிய துணியைப் பார்த்ததும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது...மூன்று பேருக்குமே ஒரேமாதிரி கலரில் ஒரே மாதிரி சட்டை ,டவுசர்!

அடுத்தடுத்து வந்த திருவிழாக்களில் இந்த நடைமுறையை உடைத்தார் அம்மா! “உங்களுக்கு சாமி நம்பிக்கை இல்லங்கிருதுக்காக....பாவம்,பிள்ளைங்க என்ன பண்ணுவாங்க;ஊருல அவங்க சோட்டு பசங்க புது துணி போட்டுட்டு வரும்போது பிள்ளைங்க மனசு கஷ்டப்படாதா....!அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை சொல்லாமல் எங்களுக்கு சொல்லிக்கொடுத்த முதல் சம்பவம் அது!

அதற்கடுத்து வந்த திருவிழாக்கள் எதுவும் வாழ்க்கையில் இனி எப்போதும் திரும்ப வராது!”அவன் அவனுக்கு என்ன பிடிக்குதோ அதை எடுத்து தச்சுக்கிட்டும் ....காச குடுத்தனுப்புங்க!”அம்மா சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் எங்கள் மூன்று பேருக்கும் காசு கொடுத்து அனுப்பினார் அப்பா .அம்மாவின் வார்த்தைக்கு அப்பா,ஒரு போதும் மறுப்பு சொல்லி நான் பார்த்ததில்லை!அம்மா மீதான அன்பு ஒருபுறம் என்றாலும் இன்னொரு காரணமும் உண்டு!நாள் முழுக்க கட்சி வேலை மட்டுமே அவருக்கு தெரிந்த உலகம்.விவசாயிகள் பிரசினை என்றால் முதல் ஆளாக நிற்கிற அப்பாவுக்கு ,தன் வீட்டில் இருக்கும் விவசாயம் குறித்த கவலை இல்லாமல் பார்த்துக்கொண்டார் அம்மா.மாதம் ஒரு முறை அல்லது இரு முறை நடக்கும் கட்சி கூட்டங்களுக்கு வருகிற தோழர்கள் அத்தனை பேருக்கும் சளைக்காமல் நாட்டு கோழி அடித்து ,நல்லெண்ணெய் ஊற்றி பக்குவமாய் பரிமாறுவதற்கு அம்மா,ஒரு போதும் முகம் சுழித்ததில்லை!இந்த புரிதல்களே அவர்கள்  இருவருக்குமான அன்பு.

இப்போ கைக்கு காசு வந்தாச்சு;அடுத்த கட்டம்!?என் அண்ணன்கள் தவிர்த்து,அண்ணன்களை நோட்டம்விட ஆரம்பித்தேன்!பெல்பாட்டம் பேண்ட்,பாபி காலர் சட்டை....இதை அடிசுக்காட்ட என்ன வழி...மண்டை காய்ந்ததில் சிக்கினார் ‘லிட்டோ’ டைலர்.அவர்தான் எங்க ஊர் இளசுகளுக்கு கனவு தைக்கிற சாமி!துணி எடுத்துக் கொடுத்தால்,முதலில் வருகிரவர்களுக்கே முன்னுரிமை (இப்ப மாதிரி முதலில் வருகிறவர்களுக்கே அல்ல!)!என் வரிசையை கணக்கு போட்டால் திருவிழா முடிந்த பத்து நாளைக்கு மேல் ஆகலாம் என்று டைலர் குருசாமி அண்ணன் சொன்னதும் ..ஆகாயம் தரைக்குள் நழுவிப் போய்க்கொண்டிந்தது.அப்போதெல்லாம் திரு விழாக்காலம் என்றால் முன் கூட்டியே இந்த வேலையை பார்க்கணும் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது.கஷ்டமர்தான் நமக்கு சாமி என்று குருசாமி அண்ணன் நினைத்திருக்க வேண்டும்;கேரளாவிலிருந்து தினக்கூலிக்கு ஆட்களை கொண்டு வந்து ,திருவிழாவுக்கு முதல்நாளே தச்சு கொடுத்தார் பாருங்க ...அன்னைக்கு ரெண்டு திருவிழா!
நெட்டு கோடு போட்டதோ,குறுக்கு கோடு போட்டதோ போட்டது போட்டபடி தைக்கிற நேரம் அது.”ஒரு பக்கம் நேட்டுகோடு,இன்னொரு பக்கம் குறுக்கு கோடு போட்டு தச்சால் எப்படிண்ணே இருக்கும்!” “நீ என்ன கிறுக்கனா!” என்னை மேலயும் கீலேயுமாக பார்த்தார் குருசாமி அண்ணன்!அப்படி தைக்கணும்னா...ரெண்டு மீட்டருக்கு பதிலா மூன்று மீட்டர் எடுக்கணுமாம்!அதையும் முயற்சி பண்ணிப் பார்த்தோம் ....ஊருக்குள் செம ரெஸ்பான்ஸ்.குருசாமி அண்ணன் ‘குரு’சாமி ஆகிட்டார்.
இது மாதிரியான தேடல்கள் சென்னையிலும் ஆரம்ப நாட்களில் தொடர்ந்தது.சென்னையின் நீள,அகலம் புடிபடுகிற காலத்தில் ‘ரெடிமேட் ட்ரெஸ்’.கடைக்குள் நுழைந்து காசு கொடுத்தால் வரும்போது புது ட்ரெஸ் போட்டுக்கிட்டு வரலாம்! ஆகா!இதுதாண்டா வரம் என்று 92ல் தொடங்கி இந்த ஞாயிற்று கிழமை முற்பகல் வரை இருந்தது!உடைத்து போட்டுவிட்டார் ஒரு டைலர் அண்ணன்!
பெரும்பாலும் ஞாயிற்று கிழமைகளில் கூட நான் வீட்டில் இருப்பதில்லை!இன்று யதார்த்தமாக வீட்டில் மதிய உணவை முடித்துக்கொண்டு ...பால்கனியில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துகொண்டிருந்தேன்.அப்பார்ட்மென்ட்டின் தரை தளத்தில் ஒரு டைலர் அண்ணன்,உடைந்து போன ஒரு தையல் மெஷினில் பழைய கிழிந்த துணிகளை தைத்துக்கொண்டிருந்தார்!பழைய துணிகளை போட்டு வைக்கும் பிளாஸ்டிக் பைகள் உட்பட....!ஒவ்வொரு வீடு வீடாக ஏறி இறங்கி ....”ஏதாவது பழசு தைக்க இருக்கா “எனக் கேட்டு தைத்து கொடுத்துக்கொண்டிருந்தார்.அதற்கு கூலியாக கொஞ்சம் சில்லறை காசுகள் அவருக்கு கிடைக்கின்றன இந்த வாழ்க்கையில் என் அண்ணன்கள் தவிர்த்து எத்தனையோ அண்ணன்கள்என்னை வழி நடத்தியிருக்கிறார்கள்....இப்பவும்!எந்த ‘அண்ணாச்சி’களுக்கும் கிழிந்த சட்டை தைக்கிற சூழல் நேரக்கூடாது!
.இங்கே ஞாயிறு என்பதுபோல்;ஒவ்வொரு நாளுக்கு ஒரு அப்பார்ட்மென்ட் என அவர் வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கும் என்பது அவர் சட்டையை பார்த்தாலே தெரிந்தது!
அடுத்த ஞாயிருக்காக நான்கைந்து சட்டைகளை கிழித்து வைத்திருக்கிறேன்;என்னால் வேறென்ன செய்யமுடியும்!?