பொட்டல்காடு

இங்கே எல்லாமும் விளையும்

கொம்பு ரெக்கார்டு – 1


ப்போது ஊருக்கு போனாலும் சில சந்தோஷங்களும் சில சோகங்களும் ஞாபகக்கிடங்கில் படிமங்களாக உறைந்து போவதை ஒருபோதும் என்னால் தடுக்க முடிந்ததில்லை இப்போதும்!கில்லிதாண்டு,காக்கா குஞ்சு,கபடி,கிட்டிப்புள்ள,பம்பரம் சுத்துறது,தில்லித்தில்லி பொம்மக்கா என்று ஆண் குழந்தைகளுக்கும் பெண்குழந்தைகளுக்கும் கொண்டாட்டமாக இருந்த விளையாட்டுகள் எதுவும் இப்போதிருக்கிற குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

நான் ஊரிலிருந்த போது பார்த்த மந்தை அம்மன் கோயில்,வட்டக்கிணறு,பெரியாத்து வாய்க்கால் என அத்தனையும் அப்படியே இருக்கிறது.அதில் விளையாடிய சிறுவர்கள் யாரும் இப்போது ஊரில் இல்லை.

என்னைப்போல் பொழப்பு தேடி புலம் பெயர்ந்துவிட்டார்கள்.திருவிழாக்களின் போது மட்டும் புதுப்பொழிவு பெரும் சுண்ணாம்பு சுவர்களும் .....வாசனையும் காணோம்.முதல் மழை பெய்யும் போது மூக்கு நாசியில் வந்து ஒட்டிக்கொள்ளும் மண்வாசனை இல்லை.வீதியின் நீள அகலம் மாறாமல் அப்படியே இருக்கிறது.ஆட்கள் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறார்கள்.ஒன்றிரண்டு பெருசுகள் மட்டும் “என்னப்பா வீரமணி மகனா நல்லாருக்கியா?” என்று விசாரித்துக்கொண்டு கிராமத்தின் சுவடுகளை சுமந்தபடி  தள்ளாடி தள்ளாடி நடந்து கொண்டிருக்கிறார்கள்.
நாகரீகங்கள் தேங்கிக்கிடக்கிற தெருக்களில் நடந்துபோகும்போது அசலூருக்குள் நடந்து போகிறமாதிரி அந்நியமாக இருக்கிறது எல்லாமே!

எனது குழந்தைபருவமும் பால்யமும் இப்படி இல்லை.என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் வட்டம் அதிகமாக இருக்கும்.குண்டன் சேகர்,
ஓவாரு ரவி,சுரேஷ்,மணிகண்டன் (இப்போது இவன் டாக்டர்)இன்னொரு மணிகண்டன்,பிரபாகரன்,மகேந்திரன்(சிவில் என்ஜினியர்)ஆண்டி மகன் கண்ணன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.எல்லோருக்கும்  ஏகப்பட்ட கனவுகள்.அதிகாலை என்.எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி கிரவுண்டில் ஒன்று சேருவோம்.சின்னச்சின்ன இடைவெளிகளில் மீண்டும் சேர்ந்தால் ராத்திரி தூங்கப்போகும்போது ராத்திரி பதினோரு மணியாகிவிடும் எல்லா நாட்களிலும்.

எங்களுடைய பேச்சில் அதிகம் சினிமாதான் இடம்பெற்றிருக்கும்.அண்ணன் எம்.ஆர்.பாரதி அப்போது உதவி இயக்குனராக இருந்தார்.அவர் எழுதுகிற கடிதங்களில் சினிமா பகிர்வு அதிகமாக இருக்கும்.அதுவே எனக்குள் சினிமா ஆசை வளர காரணமாக இருந்தது என்றுகூட சொல்லலாம்.நாளடைவில் அதுவே என் நண்பர்கள் வட்டத்தில் எனக்கு சினிமாக்காரன் என்று பேர் வர  காரணமாக இருந்தது.அதன் தொடர்ச்சியாக அதிகம் படம் பார்க்கத்தொடங்கினேன்.

கூடலூரில் அப்போது இரண்டு தியேட்டர்கள் மட்டும்தான்.எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் பி.எஸ்.சி தியேட்டர் இருந்தது.நினைத்த நேரத்தில் படம் பார்க்கிற உரிமை எங்கள் வீட்டில் மறுக்கப்பட்டிருந்தது.எங்கப்பா வீரமணி கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.மரணத்தின் கடைசி தருணத்திலும் கடவுள் மறுப்பில் உறுதியாக இருந்ததை என்னால் மறக்கவே முடியாது.வாரத்திற்கு ஒருமுறை சனிக்கிழமை மட்டும் மாட்னி ஷோ பார்த்துக்கலாம்.அது எப்படி நம்மோட சினிமா அறிவை வளர்த்துக்கொள்ள போதுமானதாக இருக்கும்!?அதற்காக அப்பவே ரூம் போடாமல் யோசித்து ஒரு காரியம் செய்தேன்.

மணி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் ரொம்பவே சிரமப்பட வேண்டியதிருக்கும்.எங்க ஊரில் ஒரு வழக்கம்..படம் போடுகிற நேரம்வரை ஏகப்பட்ட சினிமா பாடல்கள் ஒலிக்கும்.கடைசியாக கொம்பு ரெக்கார்டு
போட்டால் படம் போடுகிற நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.காடு கரைகளுக்கு வேலைக்கு போகிற ஆட்களுக்குகூட அந்த பாட்டுதான் சாப்பாட்டுக்கான நேரம் என்று முடிவுபண்ணி வைத்திருப்பார்கள்.

அந்த பாட்டு ஒலிக்கும்போது தியேட்டருக்குள் போய் இடைவேளைவரை படம் பார்ப்பேன்.அதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்துவிடுவேன்.அடுத்த நாள் இடைவேளை நேரத்துக்கு போய் மீதிப்படம்..இப்படிதான் இருந்தது எனக்கான சினிமா தாக்கம்.மணலைக்குவித்து அதன் மீது உட்கார்ந்து பார்த்த அனுபவம் இப்போது ஐநாக்ஸ் தியேட்டரில் பார்க்கும்போதுகூட இல்லை.                     - (இன்னும் தூசி தட்டுவோம்... )

3 கருத்துகள்:

//கில்லிதாண்டு,காக்கா குஞ்சு,கபடி,கிட்டிப்புள்ள,பம்பரம் சுத்துறது,தில்லித்தில்லி பொம்மக்கா என்று ஆண் குழந்தைகளுக்கும் பெண்குழந்தைகளுக்கும் கொண்டாட்டமாக இருந்த விளையாட்டுகள் எதுவும் இப்போதிருக்கிற குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!//

எப்படி தெரிஞ்சிருக்கும். அதான், காலையில எழுந்ததும் கம்ப்யூட்டர் கிளாஸ் , ஸ்கூல் விட்டு வந்ததும் மியூசிக் கிளாஸ் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட வேலைகளை கொடுத்துட்டோமே!.

உங்க ஊர் கில்லித்தாண்டு எங்கூர்ல செல்லாங்குச்சி.

நல்லாருக்குஜி. தொடர்ந்து எழுதுங்க.

 

//காலையில எழுந்ததும் கம்ப்யூட்டர் கிளாஸ் , ஸ்கூல் விட்டு வந்ததும் மியூசிக் கிளாஸ் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட வேலைகளை கொடுத்துட்டோமே!.

உங்க ஊர் கில்லித்தாண்டு எங்கூர்ல செல்லாங்குச்சி.//

//கொடுத்தது நாமல்ல...காலம் எல்லாவற்றையும் அதன்போக்கில் எடுத்துக்கொண்டது என்பதுதான் நிஜம்!?//

 

இந்த ரெக்கார்டு இருக்கே... அதைப் பார்த்தாலே 20 - 25 வருஷம் பின்னோக்கிப்போகிறது மனசு.

கிராமத்து வறட்சியையும், குடும்ப வறுமையையும் இந்த கறுப்புத் தட்டின் சுழற்சியில் மறந்து, மகிழ்ந்து கிடந்த நாட்கள் அவை.

இந்த ரெக்கார்டு மீதிருந்த காதலால் (நியாயமாக நம்ம 'பாஸ்' இளையராஜா மீதிருந்த மோகத்தால் என்றுதான் சொல்லணும்)எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சவுண்ட் சர்வீஸில் பார்ட் டைமாக வேலைக்குச் சேர்ந்த ஆள் நான்... உங்கள் எழுத்து அந்த நாட்களை என் ஞாபகங்களில் கொண்டுவந்துவிட்டது சுந்தர்.

ஃபேஸ்புக்கிலும் இணைப்பு தாருங்கள்... இந்த அனுபவத்தை நண்பர்கள் பெறட்டும்!

-ஷங்கர்